காஷ்மீர் பள்ளத்தாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு

பயங்கரவாத அச்சுறுத்தல் காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மாநிலம் முழுவதும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பள்ளிகள், கல்லூரிகள் காலவரையன்றி மூடப்பட்டுள்ளன. காஷ்மீர் பள்ளத்தாக்கில் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதோடு காவலர்களுக்கு செயற்கைகோள் தொலைபேசிகள் வழங்கப்பட்டுள்ளன. அம்மாநிலத்தின் பிரதான கட்சிகளின் தலைவர்களான மெகபூபா முப்தி மற்றும் உமர் அப்துல்லா ஆகியோர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று கூடுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அமர்நாத் யாத்திரை செல்லும் பக்தர்கள் மீது பயங்கரவாத தாக்குதல் நடத் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து, காஷ்மீருக்கு கூடுதலாக 10000 ராணுவ வீரர்கள் அனுப்பப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து சமீபத்தில் இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதுபோன்ற தொடர்ச்சியான அதிரடி நடவடிக்கைகளால் பல்வேறு யூகங்கள் வெளிவந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் தொடர்ச்சியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ராணுவத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version