மகாராஷ்டிராவில் இன்றிரவு முதல் 144 தடை உத்தரவு அமலுக்கு வருவதை அடுத்து, வெளிமாநில தொழிலாளர்கள் மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர்.
கொரோனா இரண்டாம் அலையால், மகாராஷ்டிராவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக மகாராஷ்டிராவில் இன்றிரவு 8 மணி முதல் 15 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மும்பை, தானே, புனே நகரங்களில் வேலையை இழந்த பீகார், ஜார்க்கண்ட் உத்தர பிரதேசம் மாநில தொழிலாளர்கள், மூட்டை, முடிச்சுகளுடன் சொந்த ஊருக்கு படையெடுக்க தொடங்கி உள்ளனர். லோகமான்ய திலக் ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் குவிந்தனர். பேருந்துகளில், சொந்த ஊர் செல்வதற்காக பேருந்து நிலையங்களில் கால்கடுக்க காத்துள்ளனர்.
ஒரு சில தொழிலாளர்கள், தனியார் வாகனங்களை வாடகைக்கு பிடித்து சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். கடந்தாண்டு ஊரடங்கின்போது கடும் துன்பங்களை அனுபவித்ததாகவும், அதுபோன்ற ஊரடங்கு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளதால், மீண்டும் துயரத்தை சந்திக்காமல், முன்கூட்டியே சொந்த ஊருக்கு புறப்பட்டுச் செல்வதாகவும் வெளிமாநில தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.