நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்வதால் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 436 கன அடியாக அதிகரித்துள்ளது.
தேனி மாவட்டம் கேரள மாநிலம் இடையிலான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் கடந்த 10 நாட்களுக்கு முன் பெய்த கனமழையால் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக இருந்தது. தொடர்ந்து, மழை இல்லாததால் நீர்வரத்து படிப்படியாகக் குறைந்து 450 கன அடியாக இருந்தது. இன்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 125 அடியாக உள்ளது. இந்நிலையில் தேக்கடி, முல்லைப் பெரியாறு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் அணைக்கு வரும் நீரின் அளவு ஆயிரத்து 436 கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணையில் இருந்து தேனி மற்றும் மதுரை மாவட்டங்களின் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் நீரின் அளவு ஆயிரத்து 360 கன அடியிலிருந்து ஆயிரத்து 450 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.