இன்றைய நவநாகரிக உலகில், பேஷன் பொருட்கள் பல வரலாறு காணாத விலையில் தயாரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு காலணிகளும் விதிவிலக்கு அல்ல.
சமீபத்தில், துபாய் மரினாவில் நடந்த மைட் (MIDE) பேஷன் பொருட்கள் அறிமுக நிகழ்ச்சியில், உலகின் அதிக விலை உயர்ந்த பெண்கள் காலணி அறிமுகப்படுத்தப்பட்டது. துபாயில் வடிவமைக்கப்பட்டு, இத்தாலியில் தயாரிக்கப்பட்ட இந்த செருப்பின் விலை 19.9 மில்லியன் டாலர்கள், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 140 கோடி ரூபாய்கள். 24 கேரட் தங்கத்தில், 30 கேரட் மதிப்புள்ள வைரங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்த ஹை-ஹீல்ஸ் காலணியின் குதிகால் பகுதி உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலிஃபாவின் வடிவமைப்பை அப்படியே கொண்டுள்ளது.
இந்தக் காலணியின் மிக முக்கிய சிறப்பம்சம் இதில் பதிக்கப்பட்டுள்ள விண்கல் ஆகும். 4200 முதல் 4700 ஆண்டுகளுக்கு முன்னர் புவிக்கு வந்த ஒரு விண்கல் கடந்த 1576ஆம் ஆண்டில் அர்ஜெண்டினா நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியை இந்தக் காலணியில் இணைத்து உள்ளார்கள். இந்த காலணியை இத்தாலி நாட்டை சேர்ந்தவரும், துபாயில் வசித்து வருபவருமான ஆண்டோனியோ விட்ரி என்பவர் வடிவமைத்து தயாரித்துள்ளார். இவர் 24 கேரட் தங்கத்தில் எப்படி காலணி தயாரிப்பது? – என்று கண்டறிந்ததற்காக உலகெங்கும் அறியபட்டவர் ஆவார்.
இதற்கு முன்பு 1 கோடியே 55 லட்சம் அமெரிக்க டாலர் மதிப்பில் உருவாக்கப்பட்ட காலணிதான் உலகின் மிக விலை உயர்ந்த காலணியாக இருந்தது. இப்போது அந்த சாதனையை இந்தப் புதிய காலணி முறியடித்து உள்ளது. விரைவில் இந்தக் காலணி கின்னஸ் உலக சாதனை புத்தகத்திலும் இடம்பெற உள்ளது.