`பேட்டரியே போடலையே எப்டி பேச முடியும்?’ – 13வயது மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. அதிர்ச்சியில் தந்தை!

 தனது 13 வயது மகனுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை கண்டு அதிர்ச்சியடையந்துள்ளார் அவரது தந்தை. மத்திய பிரதேசத்தில் நடந்த இந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடையச்செய்துள்ளது. மேலும் இது புதிய ரெக்கார்டு என நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

மத்திய பிரதேசம் போபாலில் உள்ள ஜமல்புரா பகுதியில் ஹவுஸிங் போர்டு காலனியில் வசித்து வருபவர் ராஜட் தங்க்ரே. இவரது மகன் வேதாந்த் தங்க்ரே (13). கடந்த வாரம் திங்கட்கிழமை இரவு 7.27 மணி அளவில் ராஜட் தங்க்ரேவின் செல்போனில் குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் `உங்கள் மகனுக்கு( மாற்றுத்திறனாளி) கொரோனா தடுப்பூசி செலுத்தபட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். 13வயதான தனது மகனுக்கு தடுப்பூசியா? என்று கண்களை துடைத்து குறுஞ்செய்தியை மீண்டும் ஒருமுறை படித்தவருக்கு தன் மேல் குற்றமில்லை என்பது புரிந்தது. `பேட்டரியே போடலையே எப்படி பேசமுடியும்?’ என்ற கணக்காக, `18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்குத்தான் அரசு இன்னும் கொரோனா தடுப்பூசி செலுத்துவது குறித்து அறிவிப்பே வெளியிடவில்லையே’ என்ற உண்மை மூளையை தட்டியது.

இது குறித்து தந்தை ராஜட் தங்க்ரே கூறுகையில், “ஜூன் 21ம் தேதி இரவு 7.27மணிக்கு எனது செல்போனில் குறுஞ்செய்தி ஒன்று வந்தது. அதில் உங்கள் மகன் வேதாந்த்க்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது என அதில் குறிப்பிட்டிருந்தனர். இது தொடர்பாக நான் புகார் அளித்தேன். இருந்தும் எந்தவித பயனும் இல்லை. அந்த குறுஞ்செய்தியிலிருந்த லிங்கின் மூலமாக உள்ளே சென்று பார்த்தபோது இன்னும் பேரதிர்ச்சியாக இருந்தது. காரணம். கடந்த சில நாட்களுக்கு முன்பு, என் மகனுக்கு மாற்றுத்திறனாளி உதவித்தொகை வாங்குவதற்காக மாநகராட்சியில் நான் கொடுத்திருந்த ஆவணங்கள் அதில் பதவியேற்றம் செய்யப்பட்டிருந்தன” என்கிறார் அவர். 

ஜூன் 21ம் தேதி ஒரேநாளில் 17.42 லட்சம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தி புதிய சாதனையை படைத்திருந்தது மத்திய பிரதேச அரசு. ஆனால் தற்போது பயனாளிகள் பலரும் “நாங்கள் ஒரு கொரோனா தடுப்பூசியே செலுத்திக்கொள்ளவில்லை..இருப்பினும் எங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ளது” என்று புகார் கூறியுள்ளனர். அதேநாளில், வேதாந்தைப்போல, சாட்னாவைச் சேர்ந்த சைந்திர பாண்டேவுக்கும் குறுஞ்செயதி வந்துள்ளது. சரியாக 5 நிமிட இடைவெளியில் 3 குறுஞ்செய்திகள் 3 நபர்களின் பெயரை குறிப்பிட்டு மூவரும் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. சைந்திர பாண்டேவுக்கு ஒன்றும் புரியவில்லை. `சம்பந்தமே இல்லாமல் நமக்கு ஏன் இந்த மெசேஜ் வருகிறது?’ என விழிபிதுங்கி போனார் அவர். 

மத்தியபிரதேசத்தில் நடக்கும் இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று அம்மாநில மக்கள் அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளனர். 

 

 

 

Exit mobile version