விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், இதனை செயல்படுத்துவதற்காக 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில் சிறு, குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை மூன்று தவணைகளாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மத்திய அரசின் இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
இந்த ஊக்கத்தொகை அனைத்து தகுதிவாய்ந்த விவசாயிகளுக்கும் சென்று சேரும் வகையில், அதனை முறைப்படி செயல்படுத்தவும், அதனை கண்காணிக்கவும் 13 ஐ ஏ எஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி ஆகிய இரண்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தலைமையில், 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.