12வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா வரும் 30ஆம் தேதி கோலாகலமாக தொடங்க உள்ளது. கோப்பையை வெல்ல இந்தியா, பாகிஸ்தான் உள்பட 10 அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் தொடங்க உள்ள உலக கோப்பை கிரிக்கெட்டி போட்டியின் வரலாற்றை பார்த்து வருகிறோம். அதன்படி, 11வது உலகக் கோப்பை பற்றி இன்று பார்க்கலாம்…
11-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி 2015-ம் ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதியில் இருந்து மார்ச் 29-ந்தேதி வரைஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாடுகள் கைகோர்த்து நடத்தின.
பங்கேற்ற 14 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி அதில் இருந்து ஒவ்வொரு பிரிவிலும் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முன்னேறும் வகையில் போட்டி அட்டவணை அமைக்கப்பட்டிருந்தது.
தோனி தலைமையில் பங்கேற்ற நடப்பு சாம்பியனான இந்திய அணி ‘பி’ பிரிவில் தான் சந்தித்த 6 அணிகளையும் வறுத்தெடுத்தது.
இதே போல் ‘ஏ’ பிரிவில் பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து அணி தோல்வியே சந்திக்காமல் 6 லீக்கிலும் வெற்றிகளை வாரி குவித்தது.
ஜிம்பாப்வேக்கு எதிரான லீக் ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியின் வீரர் கிறிஸ் கெய்ல் 215 ரன்கள் நொறுக்கினார். இதன் மூலம் உலக கோப்பை போட்டியில் இரட்டை சதம் சுவைத்த முதல் வீரர் என்ற சரித்திரத்தை அவர் படைத்தார்.
அதேபோல் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான கால்இறுதியில் நியூசிலாந்து வீரர் மார்ட்டின் கப்திலும் 237 ரன்கள் விளாசி திகைக்க வைத்தார். உலக கோப்பை போட்டியில் ஒரு வீரரின் தனிநபர் அதிகபட்ச ரன் இதுதான்.
கால்இறுதி ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தி, நாக்-அவுட் சுற்றில் முதல்முறையாக வெற்றியை ருசித்தது. ஆஸ்திரேலியா 6 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், நியூசிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியையும் வெளியேற்றின.
மற்றொரு கால்இறுதியில் இந்திய அணி 109 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை ஊதித்தள்ளி அரைஇறுதிக்கு தகுதி பெற்றது.
இதையடுத்து சிட்னியில் நடந்த அரைஇறுதியில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் படுதோல்வி அடைந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 328 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 46.5 ஓவர்களில் 233 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. மற்றொரு அரைஇறுதியில் நியூசிலாந்து அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை தெறிக்க விட்டு முதல்முறையாக இறுதிசுற்றை எட்டி சாதனை படைத்தது.
போட்டியை நடத்திய ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்னில் இறுதி ஆட்டத்தில் சந்தித்தன. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 45 ஓவர்களில் 183 ரன்னில் முடங்கி ஏமாற்றம் அளித்தது. எளிய இலக்கை நோக்கி பயணித்த மைக்கேல் கிளார்க் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 33.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகுடம் சூடியது. ஜேம்ஸ் பால்க்னர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். மிட்செல் ஸ்டார்க் தொடர் நாயகன் விருது பெற்றார்.
5-வது முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கிய ஆஸ்திரேலிய அணி கிரிக்கெட் அரங்கில் மறுபடியும் வலுவாக காலூன்றி தனது ஆதிக்கத்தை நிலை நாட்டியது. வேறு எந்த அணியும் உலக கோப்பையை 2 முறைக்கு மேல் வென்றதில்லை. மேலும் 5 விதமான கண்டங்களில் உலக கோப்பையை வென்ற ஒரே அணி என்ற பெருமையையும் ஆஸ்திரேலியா பெற்றது.
இத்துடன் ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மைக்கேல் கிளார்க், இந்த உலக கோப்பையை பந்து தாக்கி மரணம் அடைந்த ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூக்சுக்கு அர்ப்பணிப்பதாக உருக்கமுடன் கூறினார்.