நாடு முழுவதும் ஆக்ஸிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், இங்கிலாந்து அனுப்பிய 120 ஆக்சிஜன் செறிவூட்டும் இயந்திரங்கள் டெல்லி வந்தடைந்தன.
இந்தியாவில் கடந்த சில வாரங்களாக கொரோனாவின் இரண்டாம் அலை ருத்ரதாண்டவம் ஆடி வருகிறது.
மின்னல் வேகத்தில் பரவும் தொற்று, தனது கோர முகத்தை காட்டி வருவதால், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உபகரணங்களுக்கான தேவை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த கடினமான தருணத்தில், இந்தியாவுக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் முன் வந்துள்ளன.
இந்நிலையில், முதற்கட்டமாக பிரிட்டனில் இருந்து 120 ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் விமானம் மூலம் டெல்லி வந்தடைந்தன.
இதனை இந்திய அதிகாரிகள் பெற்றுக் கொண்ட நிலையில், கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் துணை நிற்போம் என இங்கிலாந்து அரசு தெரிவித்துள்ளது.
இதேபோன்று அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் இருந்து ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் நாளை இந்தியா வரவுள்ளதாக அமெரிக்காவிற்கான இந்திய தூதர் TS சந்து தெரிவித்துள்ளார்.
கடந்த 26ம் தேதி பிரதமர் மோடி உடனான உரையாடலின்போது, ஜோ பைடன் அளித்த வாக்குறுதியின்படி மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் “US C-5” air craft மூலம் நாளை இந்தியா வர உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.