சிரியாவில் குர்திஷ் படைகள் பாதுகாப்பான முகாம்களுக்கு திரும்புவதற்காக துருக்கிப் படைகளுடன் அமெரிக்கா 120 மணி நேர போர் நிறுத்தத்தை வெளியிட்டுள்ளது.
சிரியாவில் ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு எதிராக, அமெரிக்காவிற்கு துணை நின்று போராடிய குர்து படைகள் மீது துருக்கி ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதில் இதுவரை 637பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், அமெரிக்க உயர்மட்டக்குழு, துருக்கி உடனான பேச்சு வார்த்தையை தொடர்ந்து, துருக்கியின் தாக்குதலில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல, குர்து படைகளுக்கு 120 மணி நேர அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
சிரியாவில் இருந்து அமெரிக்கா தனது ஆயுதப் படைகளை திரும்ப அழைத்த பின்னர் இரு தரப்பிலும் நிகழ்ந்த முக்கியமான உடன்படிக்கையாக இது கருதப்படுகிறது. இந்த முடிவால் சிரியாவின் எல்லைப்பகுதியில் அமைதி திரும்பும் என்றும் குர்து இனத்தவர் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்றும் அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த முன்னேற்றத்தைத் தொடர்ந்து துருக்கி மீது விதித்த பொருளாதாரத் தடைகளை திரும்பப் பெற அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளதாக துணை அதிபர் பென்ஸ் தெரிவித்துள்ளார்.