12 பார்வையாளர்களோடு நடைபெற்ற 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

ருமேனியா தலைநகரில் நடைபெற்ற 4 டி-20 போட்டிகளை வெறும் 12 பார்வையாளர்கள் மட்டுமே பார்த்த நிகழ்வு நடைபெற்றுள்ளது.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) உறுப்பு நாடுகளுக்கு இடையே நடைபெறும் டி20 போட்டிகளில் சர்வதேச அந்தஸ்து வழங்கப்படும் என சமீபத்தில் அறிவித்தது.இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இந்த ஆண்டின் 20 ஓவர் போட்டிகளில் வித்தியாசமான சாதனைகள் அடங்கிய தொடர் ஒன்று ருமேனியாவில் நடைபெற்றுள்ளது.

ருமேனியா தலைநகர் புகாரெஸ்ட்க்கு அருகே உள்ள ஒரு கிராமத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் கான்டினென்டல் கோப்பை தொடர் நடைபெற்றது.  இதில் முதலில் பேட் செய்த செக்குடியரசு அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் குவித்தது. அந்த அணியின் அதிரடி பேட்ஸ்மேன் விக்கிரமசேகரா 36 பந்துகளில் 108 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய துருக்கிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 257 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவை அனைத்துமே சர்வதேச நாடுகள் விளையாடும் போட்டிகளில் இதுவரை நிகழ்த்தப்படாத சாதனைகள்.

ஆம் 36 பந்துகளில் 108  ரன்கள் குவித்த விக்கிரம சேகரா அதிக ரன்கள் எடுத்த சாதனையும், 278 ரன்கள் குவித்த செக்குடியரசு அணி அதிக ரன்கள் குவித்த அணியாகவும், பந்துவீச்சில் துருக்கி அணியை 21 ரன்களுக்கு வீழ்த்தி 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஒரு சாதனையாகவும், 21 ரன்களுக்கு ஆல் அவுட்டான துருக்கிய அணி குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற சாதனையையும், அந்த அணியின் 8 பேட்ஸ்மேன்கள் ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டானது அடுத்த சாதனையாகவும் உள்ளது. இதில் அதிகப்பட்ச சாதனையாக இந்த போட்டியை வெறும் 12 பேர் மட்டுமே மைதானத்தில் வந்து பார்த்துள்ளனர்.

ஆனால் இப்படி அடுக்கடுக்கான சாதனைகள் படைத்தாலும் செக் குடியரசு அணி இறுதிப்போட்டியில் தோல்வியடைந்து கோப்பை வெல்லும் வாய்ப்பை நழுவ விட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version