கோபிசெட்டிபாளையம் அருகே, 100வது ஆண்டை கொண்டாடும் அரசு தொடக்கப்பள்ளிக்கு, ஊர் பொதுமக்கள் சார்பில், 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளி வகுப்பறை கட்டடத்தை சீரமைத்து கொடுத்துள்ளனர். இது மட்டுமின்றி ஸ்மார்ட் வகுப்பறையையும் அமைத்து கொடுத்துள்ளனர். இது குறித்த செய்தித் தொகுப்பை காணலாம்…
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, 1924ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இப்பள்ளியில், சுற்றுப்புற பகுதிகளான பங்களாபுதூர், அண்ணாநகர், இந்திராநகர், புஞ்சை புளியம்பட்டி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் பயின்று வருகின்றனர். சமீப காலமாக பெற்றோர்கள் தனியார் பள்ளிகளின் மோகத்தால், தங்களது குழந்தைகளை அப்பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். ஆனால், தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளிகளின் கல்வி தரத்தை மேம்படுத்த, அரசு சார்பில் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு, மாணவர் சேர்க்கையையும் அதிகப்படுத்தி வருகிறது.
அந்தவகையில் பங்களாபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவர்களின் கல்வியை மேம்படுத்த, பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினருடன், ஊர்பொதுமக்களும் இணைந்து, 12 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், பள்ளியின் அலங்கார நுழைவாயில் மற்றும் வகுப்பறைகளுக்கு வண்ணம் அடித்தல், குடிநீர் வசதி, கூரை ஓடுகள் அமைத்தல், கான்கிரீட் தளம், இருக்கைகள் வசதி, விளையாட்டு மைதானத்தை சமன் படுத்துதல், மாணவர்களின் கல்வியை மேம்படுத்த ஸ்மார்ட் வகுப்பறை என அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர்.
மாணவர்களை கவரும் வகையில் பள்ளியின் சுற்றுசுவர் முழுவதும் ஓவியங்களாக வரையப்பட்டு, அதில் விவசாயத்தின் முக்கியத்துவம், பாரம்பரிய மாடுகள், பறவை இனங்கள் என ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.
தாங்கள் படித்த இந்த பள்ளியை, தனியார் பள்ளிக்கு நிகராக, அனைத்து வசதிகளையும் மேம்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ள அப்பகுதி மக்கள், வரலாற்று சிறப்பு மிக்க இந்த 100வது கல்வி ஆண்டில், பங்களாபுதூர் அரசு தொடக்கப்பள்ளி, மாணவர் சேர்க்கையில் மாவட்டத்திலேயே முதலிடம் பிடிக்கும் எனவும் கூறுகின்றனர்.
இன்னும் சில தினங்களில் அரசு சார்பில் புதிய ஸ்மார்ட் வகுப்பறை கட்டடம் திறக்கப்பட உள்ளதால், மாணவ, மாணவிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.