ஒரே இரவில் 7 வழிப்பறி சம்பவங்களில் ஈடுபட்ட கொள்ளையனை பற்றியும், அவரை 12 மணி நேரத்தில் பிடித்த போலீசாரின் அதிரடி செயல்பாடுகள்.
சென்னை வியாசர்பாடி அருகே உள்ள ஒரு பெட்ரோல் பங்க்கில் அடையாளம் தெரியாத நபர் கத்தியுடன் உள்ளே புகுந்து அங்கிருந்த ஊழியர் சீனிவாசன் என்பவரை தலையில் வெட்டியதோடு மற்ற ஊழியர்களை மிரட்டி 5 லிட்டர் பெட்ரோலை தன்னுடைய பைக்கிற்கு போட்டுவிட்டு செல்போனை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பியோடினார்.
இதையடுத்து, அந்த கொள்ளையன் வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த ஸ்வேதா என்பவரை கத்தியை காட்டி மிரட்டி, விலை உயர்ந்த செல்போன் ஒன்றை பறித்துக்கொண்டு, அங்கிருந்து சர்மா நகருக்கு சென்று அங்கு மற்றொருவரிடம் செல்போனை பறித்தார்.
செல்போனையும், பணத்தையும் பறிகொடுத்தவர்கள் கொள்ளையன் குறித்து எம்.கே.பி. நகர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஒரு பக்கம் அவர்கள் கொள்ளையனை தேட, மறுபக்கம் அந்த நபர் கொடுங்கையூர், எழில் நகர், ஒட்டேரி, வில்லிவாக்கம் பகுதிகளுக்குச் சென்று மீண்டும் கொள்ளையில் ஈடுபட்டார்.
இந்த நிலையில், தொடர் கொள்ளையில் ஈடுபட்டது ஒரே நபர் என்பது, பணத்தை பறிகொடுத்தவர்கள் சொன்ன அடையாளங்கள் மூலம் காவல்துறையினருக்கு தெரியவந்தது. உடனே, தனிப்படை போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் பொருத்தப்பட்டிருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்ததில், திருடிய அந்த வழிப்பறி கொள்ளையன் முல்லைநகர் வழியாக சென்றது தெரியவந்தது.
வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் முழுவதும் போலீசார் ஒவ்வொரு வீடாக சோதனை செய்ததில், ஒரு வீட்டில் பதுங்கியிருந்த கொள்ளையனை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவர் வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகர் பகுதியை சேர்ந்த அருண் என்ற கரடி அருண் என்பது தெரியவந்தது. ஏற்கனவே அவர் மீது 3 கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட 8 வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.
மேலும், அவரிடம் இருந்து, 6 செல்போன்கள், கத்தி, இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். வழிப்பறியில் ஈடுப்பட்ட நபரை, 12 மணி நேரத்தில் கைது செய்த போலீசாரை, பொதும்மக்கள் வெகுவாக பாராட்டினர்.