ஆத்தூர் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் 12 பேர், ஒரே நாளில் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் பரவியுள்ள சூழலில், சேலம் மாவட்டத்தில், பாதிப்பும், உயிரிழப்புகளும் அதிகரித்திருப்பது மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது.
ஆத்தூர் அரசு மருத்துவமனையில், மே 1ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை, கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 30 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்ட 65 பேர் உட்பட, மொத்தம் 95 பேர் கடந்த 18 நாட்களில் உயிரிழந்திருப்பதால், நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதீத பீதி ஏற்பட்டுள்ளது.
இதன் உச்சபட்சமாக, நேற்று ஒரே நாளில் 12 பேர் உயிரிழந்த சம்பவம், பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பரிசோதனைகளை அதிகரித்து, சிகிச்சை முறையை தீவிரப்படுத்தி, உயிரிழப்புகளை தடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.