11ஆம் வகுப்புடன் பள்ளிப் படிப்பை பாதியில் விட்ட மாணவர்கள், தாங்கள் படித்த அதே பள்ளியில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக எழுத பள்ளிக்கல்வித்துறை அனுமதி வழங்கி ஆணை வெளியிட்டுள்ளது.
அரசுப்பள்ளிகளில் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய பின்னர், பள்ளியிலிருந்து மாற்று சான்றிதழ் பெற்று பாதியில் படிப்பை விட்ட மாணவர்களின் நலன் கருதி, 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வையும், 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வுகளையும் அவர்கள் ஏற்கனவே 11ஆம் வகுப்பு படித்த பள்ளியிலேயே எழுதுவதற்கு தேர்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுடன், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களையும் சேர்த்து மாணவர்கள் எழுதிக் கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மேலும், மாணவர்கள் இணையதள வாயிலாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றும், தாங்கள் பயின்ற பள்ளியிலேயே விண்ணப்பிக்கலாம் என்றும் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.