வாக்காளர் அடையாள அட்டை இல்லாவிட்டாலும், புகைப்படத்துடன் கூடிய ஆதார், பான் கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை கொண்டு, சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் ஆறாம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது.
இம்முறை பூத் ஸ்லிப்புக்கு பதிலாக, வாக்காளர் தகவல் சீட்டை வழங்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
வாக்குப் பதிவு தினத்துக்கு 5 நாட்கள் முன்னதாக வாக்காளர் தகவல் சீட்டை வழங்கும் வகையில் ஏற்பாடு நடைபெறுகிறது.
வாக்காளர் தகவல் சீட்டில், வாக்குச்சாவடி, நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள ஆவணங்களில் ஏதாவது ஒரு ஆவணத்தை ஆதாரமாகக் காட்டி வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம், ஆதார் அட்டை, மத்திய மாநில அரசு ஊழியர் அடையாள அட்டை, புகைப்படத்துடன்கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், பான் கார்டு, ஸ்மார்ட் கார்டு, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம் ஆகியவற்றுள் ஏதேனும் ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்.