அ.தி.மு.க.வில் கட்சியை வழிநடத்துவதற்கான 11 பேரைக் கொண்ட புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி இன்று காலை இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
முன்னதாக, கடந்த வாரம் நடைபெற்ற அ.தி.மு.க. செயற்குழுக் கூட்டத்தில். அக்டோபர் 7ஆம் தேதியன்று (இன்று) கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது பற்றி அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி, அ.தி.மு.க.வின் தலைமைக்கழகத்தில் இன்று காலையில் கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் கொண்டாட்ட எதிர்பார்ப்போடு திரண்டனர்.
அங்கு வந்த 10 மணியளவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
முதலில் பேசிய பழனிசாமி, 11 பேரைக் கொண்ட கட்சியின் வழிகாட்டுதல் குழுவை அறிவித்தார். அதில், அமைச்சர்கள் கட்சியின் பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் மற்றும் ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ்பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், சோழவந்தான் மணிக்கம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.