அமெரிக்காவில் யூத மக்கள் வழிபாட்டுத் தலம் அருகே துப்பாக்கிச் சூடு – 11 பேர் பலி

அமெரிக்காவில் யூத மக்கள் வழிபாட்டுத் தலத்தின் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மீது மர்மநபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் பரிதாபமாக இறந்தனர்.

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள பிட்ஸ்பர்க் நகரில் யூத வழிபாட்டு தலம் அமைந்துள்ளது. இந்நிலையில், வழிபாட்டு தலம் அருகே நின்றிருந்த பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து துப்பாக்கிச் சூட்டை தடுக்க வந்த போலீசார் 3 பேரும் இந்த சம்பவத்தில் காயமடைந்தனர்.

துப்பாக்கிச் சூட்டை அரங்கேற்றிய நபரை மடக்கிப்பிடித்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிபர் டிரம்ப், தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மரியாதை அளிக்கும் வகையில், 31-ம் தேதி வரை வெள்ளை மாளிகை, கப்பற்படை தளங்கள் மற்றும் கப்பல்களில் உள்ள அனைத்து கொடிகளும் அரைக் கம்பத்தில் பறக்க விடப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார்.

Exit mobile version