வங்காளதேசம் மற்றும் இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தை தாக்கிய புல்புல் புயலின் காரணமாக 11 பேர் உயிரிழந்தனர்.
வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலையானது, புதிய புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘புல்புல்’ என பெயரிடப்பட்டது. இந்த நிலையில், நேற்று அதிகாலை 2.30 மணியளவில், புல்புல் புயல் கடலோர மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச நாட்டை ஒட்டிய பகுதியில் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 100 முதல் 120 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசியது. புல்புல் புயல் காரணமாக வங்காள தேசத்தின் தலைநகர் டாக்கா உள்பட பல்வேறு பகுதிகளிலும் இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. நேற்று பிற்பகல் வங்காள விரிகுடாவில் இருந்து சுந்தரவன கடலோர பகுதியை நோக்கி மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்தில் புல்புல் புயல் கடந்து சென்றது. இந்நிலையில், காற்றினால் மரம் முறிந்து விழுந்தும் மழையினால் வீட்டுச்சுவர் இடிந்து விழுந்தும் ஏற்பட்ட விபத்துகளால், வங்காளதேசத்தில் 4 பேரும் இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 7 பேரும் உயிரிழந்தனர்.