ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் கொரோனா நோயாளிகள் தங்கியிருந்த விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில், பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
விஜயவாடாவில் தனியார் மருத்துவமனை சார்பில், விடுதி ஒன்றில் கொரோனா நோயாளிகளுக்காக தனிமை முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இம்முகாமில் இன்று அதிகாலை மின்கசிவு காரணமாக, தீ விபத்து ஏற்பட்டது. முதலில் கரும்புகை வெளியான நிலையில் மளமளவென தீ பரவியது. இந்த விபத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புத்துறை வீரர்கள், நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததுடன், 27 பேரை மீட்டனர். தீ விபத்தில் சிக்கி மயக்கம் அடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மேலும் 7 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.
தீ விபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, தலா 50 லட்ச ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
விஜயவாடாவில் தனியார் விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். காயம் அடைந்தவர்கள் மீண்டு வர பிரார்த்திப்பதாகவும், மத்திய அரசு தரப்பில் ஆந்திர அரசுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார். இதேபோல், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், தீ விபத்தில் பலியோனோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.