கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் படகு கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி

ஆந்திர மாநிலம் கோதாவரி ஆற்றில் படகு மூழ்கியதில் 11பேர் உயிரிழந்த நிலையில், காணாமல் போன 29 பேரைத் தேடும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள தேவிப்பட்டினம் என்னுமிடத்தில் கோதாவரி ஆற்றில் 61பேருடன் சென்ற சுற்றுலாப் படகு நேற்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்ததும் தீயணைப்புத் துறையினரும் காவல்துறையினரும் உள்ளூர் மக்களின் உதவியுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். கடற்படையைச் சேர்ந்த நீச்சல்வீரர்களும் மீட்புப் பணியில் உதவினர். இதையடுத்து 21பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். நீரில் மூழ்கி உயிரிழந்த 11பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளன. இரவு வெளிச்சமின்மையால் நிறுத்தப்பட்ட மீட்புப் பணி இன்று காலையில் மீண்டும் தொடங்கியது. படகுகள், ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. காணாமல் போன 29பேரைத் தேடும் பணியில் தீயணைப்பு, காவல்துறை, கடற்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தேடும் பணிகளுக்கு உதவியாகத் தவளேசுவரம் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version