10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு வெளியாக உள்ளது.
கடந்த மார்ச் 14ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெற்ற 10ம் வகுப்பு பொதுத் தேர்வை, மாநிலம் முழுவதும் 9 லட்சத்து 97 ஆயிரம் பேர் எழுதியுள்ளனர். அவர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும், ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்கள், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களில் மாணவர்கள் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில், தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. மாணவர்களுடைய பெற்றோரின் கைபேசி எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமாக தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்படும் என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தங்களின் தேர்வு மையத்திலும், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை மே 2ம் தேதி பிற்பகல் முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.மே 6ம் தேதி பிற்பகல் முதல், மாணவர்கள், தனித்தேர்வர்கள், www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில், பிறந்த தேதியின் முழு விவரங்களை பதிவு செய்து, தற்காலி மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மறுகூட்டலுக்கு, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகள் வழியாகவும், தனித்தேர்வர்கள், தேர்வு எழுதிய மையங்கள் வழியாகவும், மே 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மொழிப்பாடங்களுக்கு 305 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு 205 ரூபாயும் கட்டணமாக செலுத்த வேண்டும்.தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கான சிறப்பு துணை தேர்வு, ஜூன் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.