தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுவதாக கோவையில் முதலமைச்சர் பெருமிதம்

வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து செயல்பட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார். சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில், கோவையைச் சேர்ந்த தனியார் மருத்துவமனைகள், கல்லூரிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பில் உயிர் எனும் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பின் துவக்க விழா, கோவை- அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா வளாகத்தில் நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டு, உயிர் அமைப்பை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், அமைச்சர் வேலுமணி, சி.பி.ஐ. முன்னாள் இயக்குநர் கார்த்திகேயன், மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், மேற்கு மண்டல ஐ.ஜி பெரியய்யா, கோவை மாநகராட்சி ஆணையர் விஜய கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சாலை விபத்தினை தடுக்கும் வகையில் இந்த உயிர் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதித்து, பொறுப்புடன் செயல்பட்டால், விபத்துகள் தவிர்க்கப்படும் என்றும் அவர் கூறினார். மேலும், தலைக்கவசம், சீட்பெல்ட்டுகளை வாகன ஓட்டிகள் தவறாமல் பயன்படுத்தவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். விபத்து மற்றும் அவசர காலத்தில், தமிழகத்தில் இலவச 108 ஆம்புலன்ஸ் சேவை சிறப்பாக செயல்படுவதாகவும் முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

Exit mobile version