தமிழக அரசால் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், தூத்துக்குடியில் 3 மாதங்களில் ஆறாயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன் பெற்றுள்ளனர். இதுகுறித்த ஒரு சிறப்பு தொகுப்பை காணலாம்.
தமிழக அரசின் சுகாதாரத்துறை மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறையின் கீழ் செயல்படும் 108 ஆம்புலன்ஸ் சேவை, கடந்த 2008ம் ஆண்டு துவக்கப்பட்டு, தற்பொழுது மாநிலம் முழுவதும் 926 வாகனங்களுடன் இயங்கி வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 18 ஆம்புலன்ஸ் வாகனங்கள் பல்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டு, மக்களுக்கு துரித சேவை அளித்து வருகிறது. பச்சிளம் குழந்தைகளுக்கு என பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட இன்குபேட்டர் வசதிகளுடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையும் இதில் அடக்கம்.
மேலும், அவசர கால மருத்துவ உதவியாளருடன், வென்டிலேட்டர், இசிஜி, மல்டி பாரா மானிட்டர் மற்றும் அவசர காலங்களில் உயிர் காக்கக்கூடிய 50க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துகள் இருப்பதால், நோயாளி சம்பவ இடத்தில் இருந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் அபாய கட்டத்தில் இருந்து காப்பாற்றப்படுகிறார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் கடந்த 3 மாதங்களில், 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள், 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் பயனடைந்துள்ளனர். ‘அவசரம் 108’ எனும் மொபைல் ஆப்பை, கூகுள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கம் செய்து, 108 சேவை மையத்தை அழைக்கும் பொழுது, இன்னும் விரைவாக பாதிக்கப்பட்டவர்களின் இடத்திற்கு தங்களால் செல்ல முடியும் என ஆம்புலன்ஸ் பைலட்கள் கூறுகின்றனர்.
துரிதமான, நவீனமாக சேவையால், பலரின் உயிர் காக்கும் வாகனமாக விளங்கும், 108 ஆம்புலன்ஸ் சேவையை, சிறப்பாக செயல்படுத்திவரும் தமிழக அரசிற்கு பொதுமக்கள் பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவிக்கின்றனர்.