105லிட்டர் தாய்ப்பாலினை தானம் செய்த கோவைப் பெண்!

கோவை மாவட்டத்தினைச் சேர்ந்த ஸ்ரீவித்யா எனும் 27 வயதினை உடைய பெண் 7 மாதங்களில் 105 லிட்டர் தாய்ப்பாலினை தானம் செய்துள்ளார். இவர் தனக்கு சுரந்த அதிகப்படியான தாய்ப்பாலினை கோவை அரசு மருத்துவமனைக்குத் தானமாக வழங்கியுள்ளார். ஸ்ரீவித்யாவிற்கு ஹைபர் லேக்டேடிங் என்று சொல்லப்படும் அதிகமான பால்சுரக்கும் தன்மை உள்ளது. தனது குழந்தைக்கு பால் கொடுத்தப் பிறகு அதிகமாக சுரக்கும் தாய்ப்பாலை அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு தானமாக வழங்கினார் என்று மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

கோவை அரசு மருத்துவமனையைப் பொறுத்தவரை 2015லிருந்து தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. ஸ்ரீவித்யா கடந்த வருடம் ஏப்ரல் 2022 முதல் அக்டோபர் 2022 வரை தனக்கு சுரந்த அதிகப்படியான தாய்ப்பாலினை தானமாக வழங்கியுள்ளார். இதனை ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் அமைப்பினர் இரண்டுமுறை சோதித்தப் பிறகே அங்கீகரித்துள்ளனர். தான் இரண்டாவது முறை கருவுற்று இருந்தபோது தான் இதுபோல தாய்ப்பால் தானம் வழங்கலாம் என்ற செய்தியை அறிந்துகொண்டேன் என்றும், இதற்கு என் பெற்றோர்களும் கணவரும் உறுதுணையாக இருந்தனர் என்றும் ஸ்ரீவித்யா தெரிவித்துள்ளார். என்னைப்போல பலரும் தாய்ப்பால் தானம் செய்வதற்கு முன் வரவேண்டும் என்று தனது விருப்பத்தையும் கூறியுள்ளார்.

Exit mobile version