கொலம்பியாவைச் சேர்ந்த 104 வயது மூதாட்டி இரண்டாவது முறையாக கொரோனா வைரஸிலிருந்து மீண்டுள்ளார் என்று அந்த நாட்டு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கார்மென் ஹெர்னாண்டஸ் என்ற 104 வயதான ஒரு மூதாட்டி கடந்த 9 மாதங்களில் இரண்டாவது முறையாக கொரோனா வைரஸிலிருந்து வெற்றிகரமாக மீண்டுள்ளார்.
அதாவது கொலம்பியாவின் தலைநகரிலிருந்து 119 கிலோமீட்டர் தொலைவில் உள்ள துன்ஜாவைச் சேர்ந்த ஹெர்னாண்டஸ், 2020 ஜூன் மாதம் முதல் முறையாக கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டார். அப்போது அவர் சான் ஜோஸ் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று குணமடைந்தார்.
இந்நிலையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஹெர்னாண்டஸ் தனது முதல் சினோவாக் தடுப்பூசியை போட்டுக்கொண்டார்.
இருந்தபோதிலும் மார்ச் 8 ஆம் தேதி மீண்டும் இரண்டாவது முறையாக கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட இவர் 21 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்.
கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி நம் அனைவைரையும் பீதிக்குள்ளாக்கி இருக்கும் இந்த நேரத்தில் 104 வயது மூதாட்டி கொரோனாவில் இருந்து இரண்டாம் முறையாக குணமடைந்து இருப்பது நல்ல செய்தி என்றாலும்,
நாம் அனைவரும் முகக்கவசம் அணிந்து சுய பாதுகாப்போடு இருத்தல் என்பது மிக அவசியம்.