மக்களவை தேர்தலில் 100 வயதை தாண்டிய முதியவர்கள் ஆர்வத்துடன் வாக்குச் சாவடிக்கு வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்
நான் ஒட்டு போட்டு விட்டேன்… நீங்கள் ஓட்டு போட்டு விட்டீர்களா என மை வைத்த விரலை நீட்டி காட்டுகிறார் 103 வயது நிரம்பிய மாரப்பன். ஒரு முறை இருமுறை அல்ல இதுவரை 30 முறை தேர்தலில் பங்கேற்று வாக்களித்துள்ளார் மாரப்பன். கோவை கருப்பராயன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாரப்பன், 1952ல் நடந்த முதல் பொதுத்தேர்தலில் இருந்து தற்போது வரை 30க்கும் மேற்பட்ட தேர்தல்களில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார். அவருக்கு காந்தியையும் தெரியும் காமராஜரையும் தெரியும். வாக்களிப்பது என்பது ஒவ்வொரு மனிதனின் ஜனநாயக கடமை என கூறும் மாரப்பன் அனைவரும் வாக்களிப்பதன் மூலம் புதிய இந்தியாவை படைக்கலாம் என்பதில் நம்பிக்கையோடு உள்ளார்.
இதேபோல 102 வயதை எட்டியுள்ள மூதாட்டி ஒருவர் நாகை மாவட்டம் தரங்கம்பாடி அடுத்த நாராயணன் நாயக்கன் சாவடி கிராமத்தில் தனது வாக்கை பதிவு செய்துள்ளார். ஜெகதாம்பாள் என்ற அந்த மூதாட்டியை குடும்பத்தினர் இருசக்கர வாகனத்தில் அழைத்து வரப்பட்டார். 102 வயதிலும் ஆர்வத்துடன் வந்து வாக்கை பதிவு செய்த மூதாட்டிக்கு அங்கிருந்தவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் மக்களவை உறுப்பினரை தேர்வு செய்ய செம்பாக்கம் நகராட்சி சமூக நல கூடத்தில் 90 வயது மூதாட்டியான கண்ணம்மாள் வீல் சேரில் அழைத்து வரப்பட்டு வாக்களித்தார்.