சுரானா நிறுவனத்தில் சிபிஐ பறிமுதல் செய்த தங்கத்தில்103 கிலோ காணாமல்போன விவகாரம் தொடர்பாக, சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருந்தால் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிபிஐ வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 103 கிலோ தங்கம் காணாமல் போன விவகாரத்தில், சிபிஐ அதிகாரிகளுக்கு தொடர்பு இருக்கிறதா என்பது குறித்து உயர் அதிகாரிகளால் உள் விசாரணை நடத்தப்படுவதாகவும், அவ்வாறு தொடர்பு இருப்பின் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2012ல் பறிமுதல் செய்யப்பட்ட 400 கிலோ தங்கத்தை, சிபிஐ வழக்கு தொடர்பான பொருட்களை வைக்கும் அறையில் வைக்கப்பட வில்லை எனவும், தொடர்புடைய நிறுவனத்துக்கு சொந்தமான 72 சாவிகள் கொண்ட பெட்டகத்தில் வைத்து சீல் வைக்கப்பட்டு இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காணாமல்போன 103 கிலோ தங்கம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில், எஸ்.பி. தலைமையில் சிபிசிஐடி விசாரணை நடத்தும் எனவும் சிபிஐ செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.