புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வார காலத்திற்குள் நூறு சதவீதம் மின்வினியோகம் – மின்சாரத்துறை முதன்மை செயலர் நசிமுதீன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒரு வார காலத்திற்குள் நூறு சதவீதம் மின்வினியோகம் வழங்கப்படும் என மின்சாரத்துறை முதன்மை செயலர் நசிமுதீன் தெரிவித்துள்ளார்.

தேசிய எரிசக்தி சேமிப்பு தினம் டிசம்பர் மாதம் 14ம் தேதி கொண்டாடப்படுகிறது. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், எரிசக்தி ஆதாரங்களை சேமித்தல் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட பேரணி நடைபெற்றது. மின்துறை முதன்மை செயலர் நசிமுதீன், நடிகர் சமுத்திரகனி ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நசிமுதீன், மின்சாரத்தை மக்கள் சேமிக்க வேண்டும் என கூறினார். வீடு, அலுவலகங்களின் மின்சாரம் அதிகளவில் வீணடிக்கப்படுவதாக கூறிய அவர், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கிடையே மின்சாரம் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளில் ஒரு வாரத்தில் 100% மின் வினியோகம் வழங்கப்படும் என நசிமுதீன் கூறினார்.

Exit mobile version