திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூரில் கடந்த 2018-ம் ஆண்டு வீட்டில் தூங்கி கொண்டு இருந்த தம்பதியை கொலை செய்து விட்டு 10 சவரன் நகையை கொள்ளையடித்துச் சென்ற கல்லூரி மாணவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெரகம்பியை சேர்ந்த ரமேஷ்-லதா தம்பதி வீட்டின் வெளியே ரத்த காயங்களுடன் கிடப்பதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். மேலும், லதா சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரமேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், வீட்டிற்கு வெளியே உறங்கிக் கொண்டிருந்த தம்பதியை மர்மகும்பல் அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் தாக்கியதுடன், அவர்களது வீட்டில் இருந்த 10சவரன் நகை மற்றும் இருசக்கர வாகனத்தையும் திருடிச் சென்றதை கண்டறிந்தனர்.
இந்த நிலையில், திருடுப் போன ரமேஷின் இருசக்கர வாகனம் பெரம்பலூர் அருகே விபத்துக்குள்ளாகிய நிலையில், விபத்தில், காயமடைந்த பழனிசாமி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில், பழனிசாமியிடம் காவல்துறை விசாரணை நடத்தியதில் தனது நண்பனுடன் சேர்ந்து தம்பதியை கொலை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.