பொருளாதாரத்தில் நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிப்பதை எதிர்க்கும் வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றும் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் 28 ம் தேதி பரிசீலிக்கிறது. பொதுப் பிரிவினரில் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கும் குறைவாக வருமானம் ஈட்டும் நலிந்த பிரிவினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் மத்திய அரசு சட்ட மசோதாக்களை நிறைவேற்றியுள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவ்வழக்குகளில் 10 சதவீத இடஒதுக்கீடு மசோதாவுக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுத்தது. அதே நேரம் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இந்த நிலையில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வில் இந்த வழக்குகள் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. இது தொடர்பாக வரும் 28-ம் தேதி பரிசீலிக்கப்படும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.