திருவண்ணாமலையில் பள்ளி மாணவர்களுக்கான புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது.
திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகமும், பள்ளிக்கல்வித்துறையும் இணைந்து நடத்தும் 2 ஆம் ஆண்டு புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சியர் கந்தசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். நவம்பர் 9-ம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறும் இந்த புத்தகத் திருவிழாவில் அறுபதுக்கும் மேற்பட்ட பதிப்பகங்கள் பங்கேற்று ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை விற்பனைக்கு வைத்துள்ளன.
குறிப்பாக சிறுவர்களுக்கான நீதிக்கதைகள், இலக்கியங்கள், நாவல்கள், பொது அறிவு புத்தகங்கள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. திருவண்ணாமலை சுற்றுவட்டார பள்ளிகளில் இருந்து ஏராளமான மாணவர்கள் புத்தக கண்காட்சியில் பங்கேற்றனர்.
மாணவர்கள் பேஸ்புக், டிக் டாக் போன்ற சமூக ஊடகங்களில் கவனம் செலுத்துவதால் வாசிக்கும் பழக்கமே இல்லாமல் போவதாகவும், அதனால் இது போன்ற புத்தக கண்காட்சிகளை அடிக்கடி நடத்த வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.