பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மொழிப் பாடங்களான தமிழ் மற்றும் ஆங்கிலத்திற்கு தாள் 1, தாள் 2 என இரு தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், தேர்வின் போது மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க மொழிப் பாடங்களுக்கு இனி ஒரே தேர்வு நடத்தப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதன் மூலம் ஆசிரியர்கள் பெருமளவில் கற்பித்தல் மற்றும் கல்வி மேம்பாட்டுப் பணிகளில் அதிக நேரம் ஈடுபடுத்த முடியும் என பள்ளிக்கல்வி துறை விளக்கம் அளித்துள்ளது. பள்ளிக்கல்வித் துறையின் இந்த அறிவிப்பிற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.