கடந்த 11 ஆண்டுகளில் நாடெங்கும் நடந்த வங்கி மோசடிகளால் மக்கள் இழந்த பணம் 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி என்ற தகவல் நாடாளுமன்ற மாநிலங்களவையில் வெளியிடப்பட்டு உள்ளது. இது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்…
நாடாளுமன்ற மாநிலங்களவையில், பாஜகவின் உறுப்பினர் ஆர்.கே.சிங் ‘வங்கி மோசடிகள்’ குறித்து கேட்ட கேள்விக்கு, நிதித்துறைக்கான மத்திய இணை அமைச்சர் அனுராக் சிங் தாகூர் தனது எழுத்துப்பூர்வமான பதிலை தாக்கல் செய்தார். அதன் அடிப்படையில், கடந்த 2008ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் வங்கி மோசடிகள் பெருகி வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் நாடெங்கும் உள்ள வங்கிகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற நிதி நிறுவனங்கள் 44,016 பெரிய வங்கி மோசடிகளால் ஏமாற்றப்பட்டு உள்ளன. இதன் மூலம் இழக்கப்பட்ட பணத்தின் மதிப்பு 1 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
அதிலும் கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டில்தான் மிக அதிகமாக 3,927 வங்கி மோசடிகள் நடந்து உள்ளன, இவற்றால் 25 ஆயிரத்து 883 கோடி ரூபாய் மக்கள் பணம் பறிபோயுள்ளது. மத்திய அரசின் கடும் நடவடிக்கைகளால் கடந்த 2018-2019ஆம் நிதியாண்டில் வங்கி மோசடிகளின் எண்ணிக்கை 2,836ஆகக் குறைக்கப்பட்டு உள்ளது, இதனால் மக்கள் இழக்கும் பணமும் 6 ஆயிரத்து 734 கோடிகளாகக் குறைக்கப்பட்டது.
வங்கி மோசடிகளை முற்றிலும் ஒடுக்க மத்திய அரசு பாடுபட்டு வருகின்றது. 50 கோடிக்கும் அதிகமாக வாராக் கடன்களைப் பெற்றவர்களின் மீது பொருளாதார நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன, கடன் பெற்றவர்கள் வேற்று நாடுகளுக்குச் சென்றாலும் அவர்களைக் கைது செய்து, பணத்தை வசூலிக்க மத்திய அரசு சட்டமும் இயற்றி உள்ளது. – இவ்வாறு அமைச்சரின் பதிலில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளால் விரைவில் வாராக் கடன்கள் வசூலிக்கப்பட வேண்டும், வங்கி மோசடிகள் ஒழிக்கப்பட வேண்டும் – என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.