"ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நாளை ஆய்வு"

தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்த தருண் அகர்வால் தலைமையிலான குழு, ஸ்டெர்லைட் ஆலையில் நாளை ஆய்வு செய்ய செய்ய உள்ளதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த மே மாதம் நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது. துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இதைத்தொடர்ந்து ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிர்வாகம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் மனுதாக்கல் செய்தது.

இதை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், நிர்வாக பணிகளை மேற்கொள்ள ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு அனுமதி அளித்தது. மேலும் ஆலையை ஆய்வு செய்ய மேகாலயா நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் ஒரு குழுவை கடந்த 30ஆம் தேதி தேசிய பசுமை தீர்ப்பாயம் அமைத்து உத்தரவு பிறப்பித்தது.

இந்தநிலையில், முன்னாள் நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு நாளை ஸ்டெர்லைட் ஆலையில் ஆய்வு மேற்கொள்ள உள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். மாவட்ட நிர்வாகம் சார்பில் வருவாய், காவல்துறை, மாசுக் கட்டுப்பாடுத் துறையினர் ஆய்வின் போது உடன் இருப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்டெர்லைட் ஆலையில் மட்டுமே குழு ஆய்வு செய்வதாகவும், தேவைப்பட்டால் வெளியிலும் ஆய்வு நடத்தலாம் என்றும் ஆட்சியர் கூறினார். 

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தூத்துக்குடி மக்களிடமும் தருண் அகர்வால் குழு கருத்து கேட்க உள்ளது. அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடக்கும் கூட்டத்தில் மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

Exit mobile version