ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவாக 45 ஆயிரம் மனுக்கள்- தூத்துக்குடி மக்கள் திகைப்பு

 

ஸ்டெர்லைட் ஆய்வுக்குழுவினரிடம் 45 ஆயிரம் ஆதரவு மனுக்கள் அளிக்கப்பட்டதால் எதிர்ப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான , தேசிய பசுமை தீர்ப்பாய குழு ஆய்வு நடத்தி வருகிறது.

இரண்டு நாட்கள் , தூத்துக்குடியில் ஆய்வு நடந்த நிலையில் நேற்று (திங்கள் கிழமை ) சென்னையில் உள்ள தென்மண்டல பசுமை தீர்ப்பாயத்தில் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
ஏற்கனவே தூத்துக்குடியில் வைத்து ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்ட நிலையில் நேற்றும் எதிர்ப்பு மனுக்கள் அளிக்கப்பட்டன. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக தூத்துக்குடி ஒப்பந்ததாரர்கள் சங்க தலைவர் எஸ்.தியாகராஜன், உள்ளிட்ட பலர் நேற்று மனு அளித்தனர். ஸ்டெர்லைட் ஆலையால் எந்த பாதிப்பும் இல்லை. எனவே ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

இந்த மனுக்கள் மட்டுமின்றி மேலும் 45 ஆயிரம் ஆதரவு மனுக்கள் அளிக்கப்பட்டுள்ளன. தூத்துக்குடியில் உள்ள லாரி உரிமையாளர்கள், லாரி ஓட்டுனர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள், விவசாயிகள், மீனவர்கள், கிராம மக்கள் ஆகியோரிடம் இருந்து ஆதார் அட்டை நகலுடன் இணைத்து மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனால் தூத்துக்குடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளர். ஸ்டெர்லைட்டை திறக்க முடியாது என அரசு தீவிரமாக இருக்கும் நிலையில் ஆய்வுக்குழுவின் அறிக்கையே அதை மீண்டும் திறக்கலாமா அல்லது வேண்டாமா என்பதை முடிவு செய்யும். இந்த சமயத்தில் 45 ஆயிரம் மனுக்கள் ஆதரவாக இருக்கின்றன என கூறி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்பட்டு விடுமோ என பொது மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இதனிடையே ஸ்டெர்லைட் ஆலை மக்கள் தொடர்பு அதிகாரி இசக்கியப்பன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது,தூத்துக்குடியில் எங்களை மனு கொடுக்கவிடாமல் எதிர்தரப்பினர் தடுத்துவிட்டதால் இங்கு வந்து 45 ஆயிரம் மனுக்களை வழங்கி உள்ளதாக தெரிவித்தார்.

Exit mobile version