கணவன் மனைவி இருவரும் நண்பர்களாக பிரிய 6 மாதங்கள் காத்திருக்க தேவையில்லை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குஜராத் மாநிலம் ஆனந்த் என்ற பகுதியைச் சேர்ந்த ஆகாங்ஷா, தனக்கும் தன் கணவருக்கும் இடையே சுமூகமாக பிரிவது குறித்த ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தார்.
இதை ஏற்றுக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் குரியன் ஜோசப், சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய அமர்வு, உடனடியாக அவர்களுக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டது.
அவர்கள் இருவரும் நண்பர்களாக பிரிவது என்று நல்ல சுயசிந்தனையுடன் முடிவு எடுத்துள்ளதை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. இதனால் இந்து திருமணச் சட்டம், பிரிவு 13(பி)-யின் படி அவர்கள் விவாகரத்திற்காக 6 மாதங்கள் காத்திருப்பது தேவையற்றது என்று கூறியுள்ள நீதிமன்றம் இந்த காத்திருப்பு காலத்தை தள்ளுபடி செய்தது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ.கே.கோயல், யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த ஆண்டு விவாகரத்து தொடர்பான ஒரு வழக்கில், 6 மாத காத்திருப்பு தேவையில்லை என்று நீதிமன்றம் கருதினால், அதிலிருந்து விலக்கு அளிக்கலாம் என்று உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவின் அடிப்படையில் தற்போது புதிய தீர்ப்பு பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது