இஸ்ரோ விஞ்ஞானியான நம்பி நாராயணன், இந்திய விண்வெளி ஆராய்ச்சி தொடர்பான ஆவணங்களை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்ததாக கடந்த 1994-ஆம் ஆண்டில் கேரள காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். மாலத்தீவு பெண்கள் இருவர், மற்றொரு விஞ்ஞானி உள்ளிட்டோரும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் இது ஒரு பொய் குற்றச்சாட்டு என நிரூபிக்கப்பட்டது.
இதையடுத்து அவருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்காக 50 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது
அத்துடன் நம்பி நாராயணன் மீது பொய் வழக்கு தொடுக்கப்பட்டது குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் 3 நபர்கள் அடங்கிய விசாரணைக் குழுவையும் அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் தவறான குற்றச்சாட்டின் காரணமாக சிறையில் அடைக்கப்பட்ட இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு, இழப்பீடாக வழங்க ரூ. 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார்.
கேரளா அமைச்சரவையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டம் முடிவடைந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் ,நம்பி நாராயணனுக்கு இந்தப் பணம் வெகு விரைவில் வழங்கப்படும் என்றார்.
தவறிழைத்த காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து இந்தப் பணத்தை வசூலிக்க முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு சட்டத் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.