பாஜக பிரமுகர்களால் தாக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநரை பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சந்தித்து வருத்தம் தெரிவித்தார்.
சென்னை சைதாப்பேட்டையில் கடந்த 16 ஆம் தேதி, பெட்ரோல் விலை உயர்வு குறித்து பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநர், அக்கட்சியினரால் கடுமையாக தாக்கப்பட்டார்.
இந்தக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனால், பாஜகவிற்கு மிகப் பெரிய அவப்பெயர் ஏற்பட்டது. குறிப்பாக, சமூக வலைத்தளங்களில் ஆட்டோ ஓட்டுநருக்கு ஆதரவாகவும், பாஜகவிற்கு எதிராகவும் பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில், ஆட்டோ ஓட்டுநர் கதிர் வீட்டிற்குச் சென்ற தமிழிசை சௌந்தரராஜன், அவரையும் அவர் குடும்பத்தினரையும் சந்தித்துப் பேசினார். அப்போது, ஆட்டோ ஓட்டுநரிடம் வருத்தம் தெரிவித்த தமிழிசை, அவரது குடும்பத்தினருக்கு இனிப்புகளை வழங்கி ஆறுதல் கூறினார்.
இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, ஆட்டோ ஓட்டுநரை பாஜக தொண்டர்கள் தாக்கவில்லை என்றும், கூட்டத்தில் சலசலப்பு ஏற்படாமல் இருக்க, அவரைத் தொண்டர்கள் அழைத்துச் சென்றார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.