தமிழ்நாட்டில் புரட்சித் தலைவர் எம்ஜிஆர், புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆந்திராவில் என்.டி.ஆர் ஆகியோரைத் தவிர கடந்த 40 ஆண்டுகளில் திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்து வெற்றி பெற்றவர்கள் வேறுயாருமில்லை.
அரசியல் ஆசையால் அடியெடுத்து வைத்து தமிழக மக்களால் சம்மட்டி அடிக்கு ஆளான நடிகர்களின் பட்டியல் வெகுநீளம். அரசியல் ஆசையை வெளிப்படுத்தி உள்ள அவர், சில அரசியல் வரலாற்று உதாரணங்களை தெரிந்து கொள்ள வேண்டிய நேரமிது.
சக்சஸ் என்ற வார்த்தை வழியே திரையுலகில் நுழைந்த சிவாஜியால் எக்காலத்திலும் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை. 1988-ம் ஆண்டு தமிழக முன்னேற்ற அணி என்ற கட்சியை துவக்கி தேர்தல் தோல்விகளால் கட்சியை கலைத்தார்.
இயக்குனர் பாக்யராஜ், 1987-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ந் தேதி எம்ஜிஆர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். ஆனால் அரசியல் சூறாவளியில் வெற்றிபெற முடியாமல் திமுக பக்கம் கரையொதுங்கி விட்டார்
இயக்குனர் டி.ராஜேந்தர் முதலில் 1989-ம் ஆண்டு தாயக மறுமலர்ச்சி கழகம் என்ற கட்சியை துவக்கி கலைத்தார். தற்போது லட்சிய திராவி முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை துவக்கியுள்ளார்.
நடிகர் விஜயகாந்த், 2005-ம் ஆண்டு தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்ற கட்சியை துவக்கினார். சமீபத்திய தேர்தல்களில் டெபாசிட் இழந்து படுமோசமான தோல்வியை தழுவியுள்ளது தேமுதிக.
நடிகர் சரத்குமார் 2007-ல் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி என்ற ஒன்றை துவக்கினார். தற்போது சட்டமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் இயங்கி வருகிறது அக்கட்சி.
தமிழ் திரையுலகில் தடம்பதித்து அரசியலில் அடியெடுத்து வைத்து அங்கும் வெற்றிக்கொடி நாட்டியது இருவர் மட்டுமே.
ஒருவர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் மற்றொருவர் அவர் வழிவந்த புரட்சித் தலைவி ஜெயலலிதா இதுதான் வரலாற்று உண்மையாகும்.
இந்த உண்மை புரியாமல் அரசியல் கனவில் மிதக்கிறாரா விஜய் என்று ரசிகர்களும் – பொதுமக்களும் கேள்வி எழுப்புகின்றனர்.