வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபட வேண்டும் – மின்துறை அமைச்சர் பி. தங்கமணி

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதோடு, தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மின்துறை அமைச்சர் பி. தங்கமணி வலியுறுத்தி உள்ளார்.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் மழைக் காலத்தில் மின் விபத்துக்களை தடுப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை, சீரான மின் விநியோகம் குறித்த ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.

மின்துறை அமைச்சர் பி. தங்கமணி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் விக்ரம் கபூர் விளக்கம் அளித்தார்.

துறைவாரியாக ஆலோசனை மேற்கொண்ட அமைச்சர் தங்கமணி, மழை, வெள்ளம், புயல் போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் காலங்களில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் போர்கால அடிப்படையில் பழுது மற்றும் சேதங்களை சரிசெய்து மின்விநியோகிக்கும் பணியினை சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்தார்.

பருவமழையை எதிர்கொள்ளும் வகையில்
அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை பணியில் ஈடுபடுவதோடு தயார்நிலையில் இருக்க வேண்டும்.

பருவமழை காலங்களில் முதன்மை பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. மீதி உள்ள பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகளை ஒரிரு நாட்களில் முடித்திட வேண்டும். அனைத்து அத்தியாவசிய நிறுவனங்களுக்கும் மின் விநியோகம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

மின்வாரிய அலுவலர்கள் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து சிறப்பாக பணியாற்ற வேண்டும்.
சாய்ந்து கிடக்கும் மின் கம்பங்கள், அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தமிழ்நாடு மின்சார வாரிய பிரிவு அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று அமைச்சர் பி. தங்கமணி அறிவுறுத்தினார்.

மின் வழிதடங்கள், மின் மாற்றிகள் அனைத்தையும் அவ்வப்பொழுது ஆய்வு செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

பழுதடைந்த மின்கம்பங்கள் மற்றும் மின்பகிர்மான பெட்டிகள் உடனுக்குடன் மாற்றப்பட வேண்டும்.

மின்கம்பிகள் தொங்கிய நிலையில் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய வேண்டும்.

மழை மற்றும் வெள்ள நேரங்களில் மாவட்ட நிர்வாகம் நடத்தும் ஆலோசனை கூட்டங்களில் மேற்பார்வை பொறியாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

மின்பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம், மருத்துவமனை, நீதிமன்றம், குடிநீர், தெருவிளக்கு, டெலிபோன் டவர் போன்றவற்றிற்கு தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டார்.

Exit mobile version