ரபேல் ஒப்பந்தத்தில் இந்திய அரசுதான், ரிலையன்ஸ் நிறுவனத்தை சேர்த்தது, என பிரான்ஸ் நாட்டின் முன்னாள் அதிபர் தெரிவித்துள்ளார்
பிரான்ஸிடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்கும் ஒப்பந்தத்தில் ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தில் பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் லிமிடெட்டை தவிர்த்து விட்டு இத்துறையில் அனுபவமில்லாத , ரிலையன்ஸ் நிறுவனத்தை மத்திய அரசு தேர்ந்தெடுத்தது எனவும் காங்கிரஸ் கூறி வருகிறது.
இந்த நிலையில் பிரான்ஸ் நாட்டு முன்னாள் அதிபர் ஹலாண்டே, இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இணைய செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், ரிலையன்ஸ் விவகாரத்தில் நாங்கள் சொல்வதற்கு எதுவும் கிடையாது என்று கூறியுள்ளார். ஒப்பந்தத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனத்தை பரிந்துரை செய்தது இந்திய அரசுதான் என்று அவர் தெரிவித்துள்ளார். அதனால் தான் அம்பானி குரூப்புடன் டசால்ட் நிறுவனம் பேச்சுவார்த்தையை நடத்தியது. எங்களுக்கு பரிந்துரை செய்யப்பட்டதை ஒப்புக்கொண்டோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
“ரபேல் போர் விமானம் ஒப்பந்தத்தில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தை பிரான்ஸின் டசால்ட் நிறுவனம்தான் தேர்வு செய்தது என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் ஹலாண்டேவின் பேட்டி பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.