மோடி இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த 2014 ஏப்ரல் முதல் 2018 ஏப்ரல் வரையில் 4 ஆண்டுகளில் பொதுத்துறை வங்கிகள் ரூ.3 லட்சத்து 16 ஆயிரம் கோடி வாராக்கடன்களை தள்ளுபடி செய்து உள்ளதாக ரிசர்வ் வங்கி தகவல் வெளியிட்டுள்ளது. வங்கிகள் வசூலித்த கடன் தொகையான ரூ.44 ஆயிரத்து 900 கோடியை விட இது 7 மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டு , காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மோடியின் இந்தியாவில் சாதாரண மக்கள் பணத்தை வங்கியில் செலுத்துவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்ததாக தெரிவித்துள்ளார்.மக்களை பற்றிய அனைத்து தகவல்களும் ஆதாருக்குள் இருக்கும். ஆனால் அவர்கள் பணத்தை பயன்படுத்த முடியாமல் தவித்ததாக தெரிவித்துள்ளார்.
அதேநேரம் பெரும் பணக்காரர்களுக்கான மோடியின் இந்தியா, அவர்களுக்கு கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்றிக்கொள்வதற்கு உதவியாக இருந்தது என விமர்சித்துள்ளார்.சாதாரண மக்களின் ரூ.3லட்சத்து 16 ஆயிரம் கோடியை பயன்படுத்திதான் பெரும் பணக்காரர்களின் வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார்.