முதற்கட்டமாக தமிழகத்திற்கு 37,500 டன் நிலக்கரி..?

தமிழகத்திற்கு முதற்கட்டமாக 37,500 டன் நிலக்கரியை மத்திய அரசு வழங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் நிலக்கரியின் இருப்பு குறைந்து வருவதாகவும், மாநிலத்திற்கு உரிய நிலக்கரியை வழங்குமாறும் பிரதமர் மோடிக்கு அண்மையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் மூலம் வலியுறுத்தி இருந்தார். இந்தநிலையில், தமிழகத்திற்கு 10 ரேக்குகளில் நிலக்கரியை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அரசிடம் இருந்து 72,000 டன் நிலக்கரி கோரப்பட்டநிலையில், முதற்கட்டமாக 37,500 டன் நிலக்கரி மட்டும் அனுப்ப ஏற்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களில் கூட, அதிகபட்சமாக 13 ரேக்குகளில், 48,750 டன் அளவிற்கே நிலக்கரியை வழங்கப்பட இருப்பதாகவும் தெரிகிறது.

20 முதல் 30 நாட்களுக்கு தேவையான நிலக்கரியை இருப்பு வைக்கும் அளவிற்கு, மத்திய அரசு வழங்கினால் மட்டுமே, தமிழகத்தின் தேவை பூர்த்தியாகும் என கூறப்படுகிறது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்துக்கு வெளிநாடுகளில் இருந்து, 6 லட்சம் டன் அளவிற்கு நிலக்கரி கொள்முதல் செய்ய ஒப்பந்தம் விடுக்கப்பட்டுள்ளது.

இந்தாண்டு மின்தேவை 15,440 மெகாவாட்டாக கணக்கிடப்பட்டுள்ளது. கடந்த 2017ம் ஆண்டு 13,500 மெகாவாட்டாக இருந்த மின் தேவை தற்போது அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version