மின் தேவை குறைந்ததன் காரணமாகவே மின்சார உற்பத்தி நிறுத்தம் – அமைச்சர் தங்கமணி

மின் தேவை குறைந்ததன் காரணமாகவே, தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதாகமின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி விளக்கம் அளித்துள்ளார். 

டெல்லியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

கடந்த வாரம் ஒடிசாவில் கன மழை பெய்ததால் தமிழகத்துக்கு நிலக்கரி எடுத்து வருவது பாதிக்கப்பட்டதாகக் கூறினார். அதனால்தான் தமிழகத்தில் நிலக்கரி பற்றாக்குறை ஏற்பட்டதாகவும், தமிழகத்துக்குத் தேவையான நிலக்கரியைத் தரபியூஷ் கோயல் உறுதி அளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 

தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருவதால் மின் தேவை குறைந்ததன் காரணமாகவே, தூத்துக்குடிஅனல்மின் நிலையத்தில் மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டதாக அவர் விளக்கம் அளித்தார். 

தமிழகத்தில் வழக்கமாக 15 நாட்களுக்குத் தேவையான நிலக்கரியை மட்டுமே இருப்பில் வைத்திருப்பது வழக்கம் என்றும், 15 நாட்களுக்கு மேல் நிலக்கரியை இருப்பு வைத்தால் அழுத்தம் காரணமாக விபத்து ஏற்படக் கூடும் என்பதாலேயே கூடுதல் நிலக்கரியை இருப்பில் வைப்பதில்லை என்று அமைச்சர் தங்கமணி குறிப்பிட்டார்.

தமிழகத்துக்குத் தேவையான கூடுதல் மின்சாரத்தை மத்திய மின்தொகுப்பில் இருந்து பெறுவதால், தமிழகத்தில் எந்தச்சூழ்நிலையிலும் மின்வெட்டு இருக்காது என அவர் உறுதிப்படத் தெரிவித்தார். 

அனைத்து மாநிலங்களிலும் நிலக்கரி பற்றாக்குறை இருந்தாலும், தமிழகத்தில் மட்டுமே அதுஅரசியலாக்கப்படுவதாகவும், நிலக்கரி விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் தவறான தகவல்களைப் பரப்பி வருவதாகவும்அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.

Exit mobile version