சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் 3 சிலைகள் மாயமானது குறித்து, கோயில் பணியாளர்களிடம், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 2004ஆம் ஆண்டு மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவின் போது மயில் சிலை உள்ளிட்ட 3 சிலைகள் மாற்றப்பட்டு, வெளிநாடுகளுக்கு விற்பனை செய்யப்பட்டடுள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த நாகராஜன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன்பு வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் , கபாலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது, துணை ஆணையராக இருந்த திருமகளிடம், சிலை கடத்தல் தடுப்பு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து முத்தையா ஸ்தபதியிடமும், கோயில் அர்ச்சகரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்த நிலையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஎஸ்பி குமார் தலைமையிலான அதிகாரிகள், கோவில் பணியாளர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.