கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைகளில் போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்
சென்னை புழல் சிறையில் கைதிகள் சிலர் சொகுசு வாழ்க்கை வாழ்வது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு சிறைகளிலும் சோதனை நடத்த போலீசார் திட்டமிட்டனர். அதன்படி, கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
சேலத்தில் துணை ஆணையர் சுந்தரமூர்த்தி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் சோதனை மேற்கொண்டனர். கைதிகளின் அறைகளுக்குச் சென்று, அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் வசதிகள் குறித்தும், கைதிகளிடம் செல்போன்கள் உள்ளனவா என்பது குறித்தும் சோதனை நடத்தினர்.
அதேபோல், கடலூரில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் லாமேக் தலைமையில், 100 க்கும் மேற்பட்ட போலீசாரும், கோவையில் மாவட்ட கண்காணிப்பாளர் செந்தில்குமார் தலைமையில் 10 க்கும் மேற்பட்ட போலீசாரும் சோதனை நடத்தினர்.
ஏற்கனவே சேலம் மத்திய சிறையில் கஞ்சா மற்றும் செல்போன் புழக்கத்தில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டநிலையில், சிறைக்காவலர்கள் சிலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், கோவை, சேலம் மற்றும் கடலூர் மத்திய சிறைக்குள் மேற்கொண்டுள்ள அதிரடி சோதனை, சிறைக் காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
TN Prisons -Valan