தகாத உறவு கிரிமினல் குற்றம் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.கள்ளக் காதலில் ஈடுபடும் ஆணுக்கு மட்டும் தண்டனை வழங்கப்படுகிறது. பெண்ணுக்கு எந்த தண்டனையும் ஏதும் விதிக்கப்படுவதில்லை. எனவே, இந்திய தண்டனைச் சட்டம் 497வது பிரிவை மாற்ற வேண்டும் என்று ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இதுகுறித்து, விளக்கம் அளிக்கு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பதில் மனு தாக்கல் செய்த மத்திய அரசு, “தகாத உறவில் ஈடுபடும் மனைவிக்கு எதிராக கணவர் புகார் கொடுத்தால் அவரது மனைவியுடன் பழகிய ஆணுக்கு மட்டுமே தண்டனை கொடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது.
கணவன் தகாத உறவில் ஈடுபட்டால், மனைவியால் புகார் கொடுக்க முடியாத நிலை இருப்பதாக மத்திய அரசு குறிப்பிட்டது. எனவே, ஆண்- பெண் சமத்துவத்துக்கு எதிராக இருக்கும் ஐபிசி 497-வது பிரிவை நீக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையினான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, பெண்ணின் எஜமானர் கணவன் இல்லை என்றும், ஆணுக்கு சமமாக பெண்ணையும் நடத்த வேண்டும் வேண்டும் என்று உத்தரவிட்டது.
பெண்ணுக்கு எதிராக பாகுபாடு காட்டுவது சட்ட விதிகளை மீறுவதாகும் என்று கூறிய நீதிபதிகள், தகாத உறவில் ஈடுபடும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கும் சட்டப்பிரிவு அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்றனர். தகாத உறவால் யாரும் தற்கொலைக்கு தூண்டப்படாத வகையில் அது கிரிமினல் குற்றம் இல்லை என்று தீர்ப்பளித்த நீதிபதிகள், 497வது பிரிவு சட்ட விரோதமானது என்று தங்கள் கருத்தை பதிவு செய்தனர்.
Discussion about this post