புதிய தலைமை செயலக வழக்கு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்து உள்ளது.
தமிழக அரசின் சட்டசபை, தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்குள் செயல்பட்டு வருகின்றன.
அங்குள்ள கட்டிடங்கள் பழமையாகி விட்டதாகவும், கடும் இட நெருக்கடி இருப்பதாகவும் கூறி புதிய தலைமைச் செயலகம் கட்ட திமுக ஆட்சியில் முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து 425 கோடி செலவில் அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமை செயலகம் கட்டப்பட்டது.
2011 ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்ததும் கட்டுமானப் பணிகளுக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டு இருப்பதாகவும்,பெரிய அளவில் முறைகேடுகள் நடந்து இருப்பதாகவும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா குற்றம்சாட்டினார்.
இதையடுத்து, புதிய தலைமைச் செயலக முறைகேடு தொடர்பாக விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ரகுபதி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது. இதை எதிர்த்து திமுக தொடர்ந்து வழக்கில், விசாரணை ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் தடை விதித்தது.
நீதிபதி ரகுபதி விசாரணை ஆணைய பதவியை ராஜினாமா செய்த நிலையில், புதிய தலைமைச் செயலக முறைகேடு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரித்து வருகிறது.
இந்தநிலையில், தலைமைச் செயலக முறைகேடு வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த தகவலை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.