2019 ஜனவரி 1-ஆம் தேதி முதல், தமிழகம் முழுவதும் பிளாஸ்ட்டிக் பொருட்களை பயன்படுத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. அது தொடர்பாக, சென்னை தலைமை செயலக வளாகத்தில், ‘பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ விழிப்புணர்வு பிரச்சாரத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார். அப்போது, பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்தும், மாற்றுப் பொருட்கள் பயன்படுத்துவது தொடர்பான குறும்படம், லோகோ, இணையதளங்கள் மற்றும் செயலியையும் முதலமைச்சர் பழனிசாமி வெளியிட்டார். இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் பழனிசாமி, அமைச்சர்கள் பிளாஸ்டிக் கோப்புகளுக்கு பதிலாக, இன்று முதல் காகித கோப்புகளை பயன்படுத்துவார்கள் என்று தெரிவித்தார். ஒருமுறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் பிளாஸ்டிக் பொருட்களை மீண்டும் பயன்படுத்துவதை, முற்றிலுமாக பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என்றும், பிளாஸ்டிக்கை பயன்படுத்தாத வகையில், பொதுமக்கள் முழுமையான ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி கேட்டுக்கொண்டார். இதனிடையே, தமிழ்நாடு முழுவதும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு எதிரான பிரச்சாரம் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், விளம்பர தூதுவர்களாக திரைப்பட நடிகர்கள் சூர்யா, ஜோதிகா, கார்த்தி மற்றும் விவேக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்ட அமைச்சர்கள் , அதிகாரிகள் மற்றும் நடிகர் விவேக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Discussion about this post