பிரதமர் மோடியின் கனவு திட்டம், நிறைவேறுமா என சந்தேகம்!

மும்பை – அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில்  பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகள் காட்டிய எதிர்ப்பால் இத்திட்டத்திற்கான நிதியுதவியை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது. 

இந்தியாவில் புல்லட் ரயிலை கொண்டுவர வேண்டும் என மத்திய அரசு நீண்ட காலமாக முயற்சித்தது. ஜப்பான் நாட்டுடன் கரம் கோர்த்து இந்தியாவில் புல்லட் ரயிலை இயக்குவது என முடிவு செய்யப்பட்டது.

முதற்கட்டமாக, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து மகராஷ்டிர தலைநகர் மும்பை வரை புல்லட் ரயிலை அறிமுகப்படுத்த திட்டமிட்டப்பட்டது. 

கடந்த மே மாதம், பிரதமர் மோடி, ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே ஆகியோர் இணைந்து இத்திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினர்.

97, 636 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ஜப்பான் நாட்டின் JICA என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் NHSRCL என்ற நிறுவனம் புல்லட் ரயில் திட்டத்தை முன்னெடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதற்காக குஜராத் மற்றும் மகாராஷ்டிர பகுதிகளில் நிலங்களை அளவிடும் பணிகள் தொடங்கியது.

குஜராத்தில் 8 மாவட்டங்களில் 850 ஏக்கர் நிலமும், மகாராஷ்டிராவில் பால்கர் மாவட்டத்தில் 108 கி.,மீ. தொலைவிலான நிலத்தையும் கையகப்படுத்தும் பணிகள் துவங்கின.

ஆனால், விளை நிலங்களை விட்டுக்கொடுக்க முன்வராத விவசாயிகள், இழப்பீடும் குறைவாக இருப்பதாக குற்றம்சாட்டினர்.

தொடர் போராட்டங்கள் காரணமாக இத்திட்டத்திற்கான நிதியுதவியினை தற்காலிகமாக நிறுத்திவைத்தது ஜப்பான் அரசு.

அதேசமயம், விவசாயிகளின் கோரிக்கைகளை விரைவில் நிறைவேற்றி, புல்லட் ரயில் திட்டத்திற்கு மீண்டும் உயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது மத்திய அரசு.

புல்லட் ரயில் சீறிப்பாயுமா?… விவசாயிகள் எதிர்ப்புக்கு முன் மண்டியிடுமா? என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது.  

Exit mobile version